Wednesday, June 15, 2022

women


  • அசலாம்பிகை
  • அம்மணி அம்மாள்
  • அழகியநாயகி அம்மாள்
  • ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்
  • ஆர்.சூடாமணி
  • ஆர்.பொன்னம்மாள்
  • எஸ். விசாலாட்சி
  • எஸ். அம்புஜம்மாள்
  • கமலா சடகோபன்
  • கமலா பத்மநாபன்
  • கமலா விருத்தாசலம்
  • கிருத்திகா
  • கிருபா சத்தியநாதன்
  • கி.சரஸ்வதி அம்மாள்
  • கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப்புலவர் “தமிழ்ப்புலவர் வரிசை” என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார். அதே போல தமிழகத்திலுள்ள சமண, பெளத்த தலங்களைப் பற்றிய தொகுப்புகளை ”தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள்” போன்ற புத்தகங்கள் வழி ஏ. ஏகாம்பர நாதன் சாத்தியப்படுத்தியுள்ளார். ஈழத்து கூத்து கலைஞர்கள், கூத்துக்கலை பற்றிய தொகுப்புகளாக பேராசிரியர் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்”; ”கூத்த யாத்திரை” புத்தகங்கள் ஒட்டுமொத்த கூத்துக் கலைஞர்கள், அண்ணாவியார்கள் பற்றிய விரிவான சித்திரத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது. இப்படி தொகுப்பு நூல்கள் பலவகைகளில் வருகின்றன. சமீபத்தில் அழிசி ஸ்ரீநி “எழுத்து” இதழ்களை கிண்டிலில் குறிப்பிட்ட காலத்து வாசிப்பதற்கு இலவசமாக அளித்தார். இதழ்கள் வாயிலாக முன்னோடி  எழுத்தாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்தலின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மாதிரியான தொகுப்புகள் வர வேண்டும்.

    சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் என தமிழ் இலக்கியத்தை பயில்வதற்கு எளிமையாக பல்வேறு காலகட்டங்களாக தமிழறிஞர்கள் பகுத்துள்ளனர். இன்று இந்த பின் நவீனத்துவ காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கும் நமக்கு (1892-1947) காலகட்டம் என்பது தொகுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. உண்மையில் நவீன இலக்கிய காலகட்டத்தை ”விடுதலைக்கு முன்”; ”விடுதலைக்கு பின்” என்று பிரித்துக் கொள்வது மிகவும் சரியான பகுப்பென்றே கருதுகிறேன். சிந்தனைகள், பேசுபொருட்கள், எழுத்தாளர்கள், கதைக்களம் என பல மாறுதல்களை விடுதலைக்கு முன், பின் என்றே பிரிக்கலாம். ”பிறகு” நாவலில் பூமணி அவர்கள் அந்த கிராமத்திலுள்ளவர்களுக்கு சுதந்திரம் என்பது எந்த அளவிற்கு பொருட்டில்லாமல் இருக்கிறது என்பதை பகடியாக சொல்லியிருப்பார். கிராமங்களில் அவை பொருட்டில்லையானாலும் இலக்கியத்திற்கான பேசுபொருள் என்பதையும், எழுத்தாளர்கள் எல்லா மட்டத்திலிருந்தும் வருவதற்கும் விடுதலை அவசியமாயிருந்தது. அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் (1892-1947) காலகட்டத்தை எடுத்துக் கொண்டு தொகுப்பு நூல் செய்திருப்பது இவ்வகையில் சிறப்பான ஒன்று.

    முதலில் அவர் ”விடுதலைக்கு முந்தைய தமிழ்ச்சிறுகதைகள் பாகம் 1” செய்யும்போது இருபத்தியைந்து எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்காக எண்ணற்ற இதழ்களை வாசித்திருக்கிறார். அதனைத் தொகுத்திருக்கிறார். அந்த இருபத்தி ஐந்தில் ஐந்து பெண் எழுத்தாளர்கள் இருந்தனர். பின்னரும் வெளியுலகில் பெரிதும் அறியப்படாத பல நல்ல பெண் எழுத்துக்களைப் பார்த்து ஊக்கமடைந்து தனியாக “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – பெண்ணெழுத்து” என்ற புத்தகத்தை எழுதியதாகச் சொன்னார்.

    இந்த புத்தகத்தின் உள்ளடக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் முதல் பகுதியில் உள்ளன. இந்த சிறுகதைகளின் முகப்பில் அந்த சிறுகதை எந்த இதழில் வெளிவந்தது, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுகதை இதழில் வெளிவந்தது போல அதன் முகப்புப் பக்கம் கொடுத்திருப்பது நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இரண்டாவதாக “கதைகளின் கதை” பகுதி அமைந்துள்ளது. இதில் அந்தக் கதை வெளிவந்த இதழ் பற்றிய வரலாறு, எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுடைய புகைப்படங்கள், இதழ்களின் முகப்புப் புகைப்படங்கள் மேலும் ஆழமான சித்திரத்தை அளிக்கிறது. புத்தகத்தை ஆரம்பிக்கும் போது வலையின் கண்ணியின் முனையில் நின்று கொண்டிருப்பது போன்று தோன்றினால் வாசித்து முடிக்கும் போது ஒரு கண்ணிவலையின் முந்நூற்றியருபது டிகிரி கோணத்தை வாசகனால் கண்டடைய முடியும். அங்கிருந்து அவன் மேலும் விரித்துச் செல்வதற்கான சாத்தியமுள்ளது.

    எனக்கு வெண்முரசின் சொல்வளர்காடு நாவலில் வரும் வரிகள் நினைவிற்கு வந்தது “மானுடன் பெருவெளியின் துளி. அங்கு அவ்வாறு அமைந்தது இங்கு இவ்வாறு அமைகிறது. குடத்தில் அடங்கக்கூடியதே விண் என்பதனால் மட்டுமே அறிவு பயனுள்ளதாகிறது.” உண்மையில் அப்படியான மகத்தான துளியைத்தான் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தின் வழியாக வாசகனுக்கு எடுத்துக் காணித்திருக்கிறார். சிறுகதைகளுக்கான தன் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் போது “என் ரசனை, எனக்கு பிடித்த கதைகள் என்றில்லாமல் அந்த காலகட்டத்தை பிரதிபளிக்கக் கூடிய சிறுகதைகளையே நான் தேர்வு செய்தேன்” என்றார். சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபோது அதை உணர முடிந்தது.

    சொல்வளர்காடு நாவலின் இன்னொரு வரியும் நினைவிற்கு வந்தது “இப்பருவெளிப்பெருக்கு ஒரு நெசவு. ஊடுசரடென செல்வது அறிபொருள். பாவுசரடென ஓடுவது பிரக்ஞை. பிரக்ஞை உறையாத ஒரு பருமணலைக்கூட இங்கு நீங்கள் தொட்டெடுக்க முடியாதென்றறிக!” இந்த புத்தகத்தின் வழி அவர் காட்டும் இந்த சிறு நெசவுத்துணியின் ஊடுபாவின் வழி ஒட்டுமொத்த விடுதலைக்கு முந்தைய சிறுகதைகளின் போக்கை தொட்டு விரித்தெடுக்கலாம் என்று தோன்றுகிறது.

    இன்று இணைய காலகட்டத்தில் இதழ் ஆரம்பிப்பது பொருட்செலவு அதிகமல்லாத, ஆனால் உழைப்பை மட்டுமே கேட்கக் கூடிய ஒன்றாக உள்ள காலம். மின்னிதழ்களின் பெருக்கம் மற்றும் தொடர் செயல்பாடுகளால் சிறுகதைகளின் பெருக்கம் நிகழ்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இதற்கிணையாகவே விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் அத்தகைய வீச்சான எழுத்து நிகழ்ந்திருக்கிறது. நவீனத்தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன. பெரும்பான்மையானோர் 1915இல் விவேகபோதினியில் வா.வே.சு. ஐயர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” தான் தமிழின் முதல் சிறுகதை என்பர்.

    ஆனால் சிறுகதைக்கான மேற்கத்திய மற்றும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய இலக்கணமாக “ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடியது; முதல் வரியிலேயே கதை ஆரம்பித்தல்; கதை முழுவதுமாக ஒரு பொருள், ஒரு மனநிலை பற்றியதாகவும், ஒட்டுமொத்தமாக ஒரு ஒருமை கூடிவருவதும்” ஆகியவை கூறப்படுகிறது. அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் வேதசகாயம்பிள்ளை ஆகியோர் அ. மாதவையாவின் “கண்ணன் பெருந்தூது” சிறுகதையே தமிழின் முதல் சிறுகதை என்பர்.

    எழுதப்பட்டதன் அடிப்படையில் கூட 1892இல் திருமணம் செல்வகேச முதலியார், பாரதி, அம்மணி அம்மாள் ஆகியோர் முன் வரிசையில் உள்ளனர்.  1892-லிருந்து “விவேகசிந்தாமணி” இதழில் மாதந்தோறும் சிறுகதைகள் வந்து கொண்டிருந்தன.

    இன்றைக்கு மேற்கத்திய சிறுகதைகளுக்கான இலக்கணத்தை நாம் ஒத்துக் கொண்டாலும் கூட க.நா.சு அவர்கள் சொல்வது போல நம் மரபை ஆராய்ந்து அதன் சாராம்சங்களையும் கருத்தில் கொண்டு புதியதொரு விமர்சன முறையை கண்டடையும் சாத்தியத்தை நாம் கை கொள்ள வேண்டும். இன்று எழுதப்படும் சிறுகதைகள் பலவும் இந்த இலக்கணங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் சிறுகதையின் ஆரம்பப் புள்ளியிலிருந்து நவீன இலக்கியத்தை பகுத்துக் கொண்டு அவற்றை மதிப்பிடக்கூடிய 1947 வரையான ஒரு சித்திரத்தை அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகங்கள் அளிக்கிறது.

    தொல்காப்பியத்திலேயே சிறுகதையின் இலக்கணம் இருப்பதாகத் தெரிகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் சிறுகதைகள் என்று பகுத்து விடக்கூடிய கதைகள் உள்ளன. ஆனால் இன்றைக்கு நம் கைகளில் புத்தகங்களாக, அச்சு நூல்களாக தவழக்கூடிய வாய்ப்பு 1812இல் எல்லீசு அவர்கள் காலகட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது . எல்லீசு ஏற்படுத்திய “The college of saint George” என்ற அமைப்பின் வழியாக 1822இல் வீரமாமுனிவர் “பரமார்த்த குரு கதை” என்ற நூலைத் தொகுத்தார். பின்னர் வாய்மொழியாக வழங்கி வந்த பல கதைகளை நம் அறிஞர்களும், தமிழ் மேல்பற்றுள்ள வெளி நாட்டவரும் தொகுக்க ஆரம்பித்தனர். அந்தத்தொகுப்புகளில் தன் புனைக்கதைகளையும் எழுத ஆரம்பித்தனர். 1892 க்குப் பிறகு வந்த பத்திரிக்கைகள், இதழ்கள் வழியாக எழுத்து வளர ஆரம்பித்தது. முதலில் தீவிர எழுத்து, வெகுஜன எழுத்து என்ற பாகுபாடுகள் அற்று ஆரம்பித்த பயணம் மெல்ல பாகுபாடு ஆரம்பித்த விடயம் இதழ்களின் எழுச்சி வழியாக புலப்படுகிறது. “விவேகசிந்தாமணி”; “திராவிட மத்தியக் காலக் கதைகள்” என துவங்கிய இதழ்கள் 1915 களில் தீவிர இலக்கிய இதழ்களான “சக்ரவர்த்தினி”; “மணிக்கொடி”; “கலாமோகினி” போன்றவையாக உருவெடுத்தன.  தீவிர இதழ்களுக்கு மாற்றாக “ஆனந்தபோதினி” ஆரம்பிக்கப்படும்போது வெகுஜன எழுத்து, விஷயங்களின் ஆதிக்கம் சிறுபத்திரிக்கை, இதழ்களில் ஆரம்பிக்கிறது. ஆனந்தபோதினியின் வெற்றியைப் பார்த்து ஊக்கம் கொண்டு “ஆனந்த விகடன்”; “ஆநந்தகுணபோதினி” ஆகிய இதழ்கள் வெகுஜன இதழ்களாக 1925களில் துவங்குகின்றன. இதில் புதிய எழுத்தாளர்களான பலர் அறிமுகமானாலும், தீவிர எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் போன்றவர்கள் இந்த வெகுஜனப்பத்திரிக்கைகளில் எழுதவில்லை என்ற போக்கும் கவனிக்கத்தக்கது.

    சக்ரவர்த்தினி இதழ் 1905இல் ஆரம்பிக்கப்படும் போது பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பாரதி ஒரு வருடம் அதற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அங்கிருந்து தான் அசலாம்பிகை, அலர்மேல் மங்கை, கஜாம்பிகை, ராஜலஷ்மி அம்மாள் போன்ற எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்தப் பெயர்கள் யாவும் எனக்கு புதியவை. இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் தெரிந்து கொள்ள அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகம் உதவுகிறது. அந்த காலகட்டத்தில் அதன் தேவை இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. “மணிக்கொடி இதழ்” மணிக்கொடி எழுத்தாளர்கள்(கு.ப.ரா, ந.பா, புதுமைப்பித்தன், மெளனி, சிட்டி, சி.சு.செல்லப்பா), மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் (லா.ச.ரா, சங்கு, க.நா.சு, எம்.வி.வி) என ஒரு நிரையை ஆரம்பித்து வைத்தது. அ. மாதவையா நடத்திய பஞ்சாமிர்தம் இதழில் அவர் தன் குடுமபத்தினர், நண்பர்கள் என அனைவரையும் எழுத ஊக்குவித்தார். அங்ஙனம் உருவான மா. கிருஷ்ணன், வி. விசாலாட்சி அம்மாள், மா. லஷ்மி அம்மாள் போன்றோர் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர். மா. கிருஷ்ணன் எழுதிய சூழலியல் சார்ந்த புத்தகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

     



  • கி.சாவித்ரி அம்மாள்
  • கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
  • குகப்பிரியை
  • குமுதினி
  • கெளரி அம்மாள்
  • சகுந்தலா ராஜன்
  • சரஸ்வதி ராம்நாத்
  • சரோஜா ராமமூர்த்தி
  • செய்யிது ஆசியா உம்மா
  • செய்யூர் சாரநாயகி அம்மாள்
  • ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்
  • டி.பி.ராஜலட்சுமி
  • நீலாம்பிகை அம்மையார்
  • மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்
  • மீனாட்சிசுந்தரம்மாள்
  • வி. விசாலாட்சி அம்மாள்
  • வி.சரஸ்வதி அம்மாள்
  • விசாலாட்சி அம்மாள்
  • வை.மு.கோதைநாயகி அம்மாள்
  • ஹெப்சிபா ஜேசுதாசன்
  • No comments:

    Post a Comment